பொன்னியின் செலவனை திரையில் காண்பது என்பது அரை நூற்றாண்டுகளாக தமிழனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெரிய பெரிய புத்தகங்களாக ஐந்து பாகங்கள் எழுதப்பட்ட புதினம் அது. சில {பல} ஆண்டுகள் தொடர்கதையாக வந்த கதை . தனியாக திரைக்கதை எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லாமல் கதையே திரைக் கதையாய் அமைந்த நூல் அது. அவ்வளவு விறுவிறுப்பான கதை திரைக்கதை கையில் இருக்கும் போது அதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை?
நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், வஞ்சிக் கோட்டை வாலிபன் , ஒளவையார், போன்ற படங்கள் வந்த காலத்திலேயே எடுத்திருக்கலாம். பட்ஜெட் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். இருந்தாலும் எடுக்கவில்லை. எடுக்காததன் காரணமாக சில விஷயங்களை கூறலாம்.
கதையின் போக்கு:-
கதையில் பல இடங்களில் பலமுக்கிய கதாபாத்திரங்கள் தென்படுகின்றன. பொருத்தமான ஆட்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆதித்த கரிகாலர், அருண்மொப்ழிவர்மர், வந்திய தேவன் போன்ற பாத்திரங்களுக்கு சரியான ஆட்கள், ஈகோ விட்டுக் கொடுத்து நடிக்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம்.
பட்ஜெட்:-
எழுபதுகளில் நிறைய நாயகர்கள், நாயகிகள் இருந்தாலும் பட்ஜெட் அதிகமாக வந்திருக்கக் கூடிய வாய்ப்புகள். கலரில் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஒருவேளை ராஜராஜ சோழன் படத்திற்கு கூட முதலில் இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருக்க கூடிய வாய்ப்புகளே அதிகம். பட்ஜெட் மிக மிக அதிகமாக போயிருக்கும்.
முடிவு:-
புதினத்தின் முடிவில் பொன்னியின் செல்வன் மகுடத்தைத் தூக்கி உத்தமச் சோழன் தலையில் சூடுவதை சினிமா பிரம்மாக்களும், சராசரி ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்களா.... கண்டிப்பாக வாய்ப்பில்லை. பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தீக்குளிக்க க் கூட தயங்க மாட்டார்கள். சரித்திர கதையாய் போய்விட்டதால் முடிவை மாற்றவேவேவே முடியாது.
கல்கி:-
கல்கியின் வர்ணனைகளை காட்சியாக்குவது என்பது ஒரு தவம் போன்று செய்யவேண்டிய ஒன்று. பல காட்சிகளை திரைக்கு கொண்டுவரும் அளவுக்கு தொழில்நுட்பம் சென்ற நூற்றாண்டின் இறுதிவரைக்கும் கூட கிடையாது.
80களில்
இளம் நடிகர்களின் ஆதிக்கத்தில் வந்ததால் பாத்திரங்களை தாங்கும் வல்லமை படைத்த நடிகர்களும். பட அதிபர்களும் இயக்குநர்களும் சரித்திர கதைகளிலிருந்து விலகியே இருந்தார்கள்.
இன்றைய சூழல்:-
இன்றைய சூழல் அற்புதமாக இருக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், உத்தம சோழன் கதாபாத்திரங்களை ஏற்றுக் கொள்ள சரியான ஆட்கள் இருக்கிறார்கள். ஆட்கள் என்பதைவிட ஆள் என்பது சரியாக இருக்கும். ஆம். கமலஹாசன்தான் அவர். அவரையே இந்த வேடங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லலாம். இறுதிக்காட்சியில் கமலஹாசனுக்கே பட்டம் சூட்டப் படுவதால் ரசிகணும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள், பராந்தகச் சோழன் மற்றும் பழைய காட்சிகளில் வரும் பல சோழச் சக்கரவர்த்திகள் கதாப்பாத்திரங்களையும் கமலஹாசனையே செய்யச் சொன்னால் அவருக்கும் ஒரு சாதனை படைத்த மாதிரி இருக்கும்.
வந்தியத் தேவன் கதாபாத்திரத்தைக் கூட கமல ஹாசனைச் செய்யச் சொல்லலாம். என்ன கூடுதல் மேக் அப் தேவைப் படும். [மற்றவர்கள் ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள். இவர் வேறு குலம். எனவே வித்தியாசம் தெரியவேண்டாமா..... } ஆனால் எந்த ஈகோ பிரச்சனை யும் ஏற்படாது.
நந்தினியாக நயந்தாராவையும், குந்தவையாக நமீதாவையும் போட்டுவிடலாம். வானதி, மணிமேகலை பாத்திரங்களுக்கு பாவனா, சமிக்ஷா போன்றவர்களைப் போட்டுவிடலாம். வீரப்பாண்டியன், பழுவேட்டரையர் போன்ற பாத்திரங்களுக்கு நெப்போலியன் பிரகாஷ்ராஜ் போன்றவர்களை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.
கிராஃபிக்ஸ் உபயோகப் படுத்தி முடிந்தவரை கல்கியின் காட்சிகளை கொண்டுவந்துவிடலாம்.
படத்தின் செலவுதான் கண்டபடிஆகும். ஆனால் அதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. சன் டி,வி. அவர்களால்தான் இது முடியும். ஏற்கனவே பட்ஜெட் பிரச்சனையால் தள்ளாடிய பல படங்களை அவர்கள் காப்பாற்றியுள்ளனர். தமிழ் வாசகனின் பலநாள் ஏக்கத்தை அவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.
திரைப்படமாக எடுக்கும் வாய்ப்பு அமையா விட்டாலும் குறைந்தபட்சம் மெகா சீரியலாகவாவது எடுக்க வேண்டும். நந்த்னிக்கும் குந்தவைக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பயங்கர வரவேற்பினைப் பெறும். நந்தினிக்கு நடக்கும் சோகங்கள் பெண்கள் மத்தியில் ரத்தக் கண்ணீரை வரவைக்கும்.
ஒட்டுமொத்த தமிழ்ரசிகர்களின் அரைநூற்றாண்டு கனவினைத்தீர்க்கும் வலிமை சன் டி.வி.க்கு மட்டுமே உண்டு. நிறைவேற்றி வைப்பார்களா?